நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் மயிலாடுதுறை உள்பட 2 தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல் கட்சியின் தேசிய தலைமை தவித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஒரு வருடத்திற்கு மேலாக களப்பணி செய்து தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கியுள்ள நிலையில் அந்த சீட்டுக்காக திருவாரூர் மாவட்டத் தலைவர் மன்னார்குடி எஸ்.எம்.பி. துரைவேலன் பீல்டு அரசியலில் உள்ள எனக்கு தான் சீட்டு வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு 200 க்கு மேற்பட்ட கதர் சட்டைக்காரர்களை அழைத்துச் சென்று விருப்ப மனு கொடுத்துவிட்டு காத்திருக்கிறார். அதே சீட்டுக்காக ராகுல்காந்தி உள்பட டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள மயிலாடுதுறையில் இருந்து டெல்லியில் இடம்பெயர்ந்துள்ள சிஇஓ பிரவின் சக்கரவர்த்தி டெல்லி அரசியல் மூலமாகவே சீட்டுக்காக போராடிவருகிறார்.
ராகுல்காந்திக்கு நெருக்கமானவராக உள்ளதாக கூறி சீட்டு வாங்கிவிட பிரவின் சக்கரவர்த்தி முயன்று வரும் நிலை அறிந்து திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலனின் மகன் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான பிரவின் தனது தந்தையை டெல்லிக்கே அழைத்துச் சென்று சில நாட்கள் முகாமிட்டு கார்க்கே உள்ளிட்ட தேசிய தலைவர்களை சந்தித்து உள்ளூரிலேயே இருந்து உள்ளூர் மக்களுடன் பழகி மக்களுடன் மக்களாக உள்ள எங்க அப்பாவுக்கு சீட்டு கொடுங்கள். வெற்றி பெற்று இந்திய கூட்டணியின் கரத்தை பலப்படுத்துவோம் என்று நம்பிக்கையாக கூறியுள்ளார்.
இதனால் டெல்லியில் உள்ளவருக்கு சீட்டு கொடுப்பதா இல்லை தொகுதியிலேயே இருந்து லோக்கல் அரசியல் செய்பவருக்கு சீட்டு ஒதுக்குவதா என்று கதர்சட்டை தேசிய தலைமைக்கே குழப்பம் நீடிப்பதால் நேற்றைய வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை விடுபட்டுள்ளது. இதற்கிடையில் மயிலாடுதுறையை எனக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசரும் டெல்லியில் முகாமிட்டுள்ளாராம். இன்று இரவு கூடும் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படலாம் என்ற நிலை உள்ளது. பெரும்பாலும் தொகுதியிலேயே சுற்றி வருபவருக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள் விபரமறிந்த கதர்சட்டைகள். யாருக்கோ சீட்டு ஒதுக்குங்க வேட்பு மனுவுக்கு கடைசி நாள் வரப்போகுது என்கின்றனர் கூட்டணி கட்சியினர்.