’கமல்-60’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள், ஆனால் அதிசயம் நடந்துள்ளது, ஆட்சி தொடர்கிறது. அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என்று தெரிவித்தார். வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிசயம் நடக்கும் என்றும், தான் முதல்வர் ஆவேன் என்றும் சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினி நேற்று விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோதே அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவர் பேசியது குறித்து தான் விவாதம் எழும் என்று எதிர்பார்த்த ஒன்று தான். அப்படி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் ரஜினி பேசியது குறித்து எழுத்தாளர் மதிமாறன் பேசியபோது, 'ரஜினிக்கு வயதாகிவிட்டது அதனால் ஒரு சப்போர்ட்டாக கமல்ஹாசனை வைத்து கொள்வதாகவும், இதனால் தான் கமல் ரஜினி இணைப்பு நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
உடனே அருகில் அமர்ந்து இருந்த ரஜினி ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் எழுத்தாளர் மதிமாறன் கூறியதற்கு பதில் கூறினார். அதில், ரஜினிக்கு வயதாகிவிட்டது என்றால் ஸ்டாலின் என்ன இளைஞரா? தளபதி என்று கூறுகிறீர்களே, ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் ஓட்டப் போட்டி வைத்து பார்க்கலாமா? ரஜினியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா? ரஜினி இன்றும் உடலளவில் ஃபிட்டாக இருக்கிறார். ஆனால் ஸ்டாலின் எப்படி நடந்து செல்வார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று பேச ஆரம்பித்ததும் விவாத நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கராத்தே தியாகராஜன் யாரையும் பேச விடாமல் தொடர்ச்சியாக அவர் ரஜினியை குறை சொன்ன மதிமாறனை விமர்சனம் செய்து கொண்டே பேசினார். ஒரு கட்டத்தில் 'ஆமாம் நான் ஸ்டாலினுக்கு எதிராக தான் பேசுகிறேன், அப்படியே வைத்துக்கொள்' என்று கூறியது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.