நேற்று மக்கள் அனைவரும் வாக்களிக்க மிகுந்த ஈடுபாட்டோடு சென்றிருந்தனர். முக்கியமாக சென்னையிலிருக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலையில் இருந்தே கிளம்பத் தொடங்கிவிட்டனர்.
பேருந்து, ரயில் என அனைத்தும் நிரம்பி வழிந்தன. பேருந்தின் மேற்கூரையில் உட்கார்ந்துகொண்டும், ரயில் என்ஜினில் நின்றுகொண்டும் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். நேற்று முன்தினம் கோயம்பேட்டில் பரபரப்பாகி கல்வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. செங்கல்பட்டுவரை போக்குவரத்து நெரிசல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வாக்களிக்க அனைவரும் செல்வதால் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படவும், முன்னேற்பாடுகளும், சரியாக செய்யப்படவில்லை. இதுதான் அந்த களேபரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்தது. மேலும், தீபாவளி, பொங்கலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுபோல இதற்கும் ஏன் முன்னேற்பாடுகள் செய்யவில்லை. ஒருவேளை ஓட்டளிப்பதை ஆளுங்கட்சி விரும்பவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தும், எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாததால், ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாக்களிக்க சென்றுவிட்டனர். இதனால் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. இப்படியான பல்வேறு காரணங்கள்தான் பேருந்துகள் இயக்கப்படவில்லை.