அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் சுற்று பயணமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கள ஆய்வு மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பை வழங்க திருச்சி அ.தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.
இதனிடையே திருச்சி மாநகர் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை அருகே முதல்வருக்கு சிறப்பான வரவேற்பை வழங்க தயாராக உள்ள நிலையில், திருச்சி ஆவின் பால் தலைவரும், மாவட்ட மாணவர் அணி செயலாளருமான கார்த்திகேயன் கலைஞர் அறிவாலயம் அருகில் தனியாக முதல்வருக்கு வரவேற்பு அளிக்க மேடை அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கலில் முதல்வர் கள ஆய்விற்கு வந்தபோது அமைச்சர் தங்கமணி, திருச்சி பொறுப்பாளர்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் அழைத்து கட்சிக்குள் இருக்கும் எந்தவித உட்கட்சி பூசல்களையும் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள், இணைந்து செயல்படுங்கள், முதல்வருக்கு நல்ல வரவேற்பை தர வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில், அதை காதில் வாங்கி கொள்ளாமல் தனித்தனியாக இரண்டு அணிகளாக பிரிந்து வரவேற்பு கொடுக்க தயாராகி விட்டனர்.
இதற்கிடையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை வெல்லமண்டி நடராஜன் கேட்டு வரும் நிலையில், ஆவின் கார்த்திகேயனும் தனக்கு தான் சீட்டு என்றும், எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் கிழக்கு தொகுதி தனக்கு தான் என்றும் தனித்தனியாக தங்களுடைய பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
ஒரே இடத்தில் வரவேற்பு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டு இருந்த நிலையில், இரண்டு இடங்களில் வரவேற்பு கொடுப்பது என்பது சற்று கடினமான காரியம். எனவே ஒரே இடத்தில் வரவேற்புக் கொடுக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று காவல்துறை தரப்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பேசப்பட்டுள்ளது.
ஆனால் கார்த்திகேயன், நான் அமைச்சரிடம் பேசி அனுமதி பெற்று விட்டேன். மேலும் நான் வரவேற்பு கொடுப்பது முதலமைச்சரின் நிகழ்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே என்னால் இதை நிறுத்தி வைக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதை உறுதிப்படுத்த காவல்துறை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பேசுகையில், நான் அப்படி எந்த ஒரு அனுமதியும் கொடுக்கவில்லை. நான் மாநகர் சார்பில் இணைந்துதான் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். நான் நிர்வாகி ஐயப்பனிடம் இதுகுறித்து ஆவின் கார்த்திகேயனிடம் பேசி இணைந்து செயல்பட வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அது அவருடைய காதுக்கு எட்டவில்லை போலிருக்கிறது. அதையும் தாண்டி அவர் செய்கிறார் என்றால் இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து நாம் கார்த்திகேயனிடம் விளக்கம் கேட்டபோது, “மாநகரம் சார்பில்தான் வரவேற்பு என்பது வழங்கப்படுகிறது. நாங்கள் மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருப்பதால் இளைஞரணி சார்பில் இந்த வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தேன். அவரும் அதற்கு சரி என்று கூறி முதலில் நான் வரவேற்பு வழங்கும் இடத்திற்கு நீங்கள் வந்து கலந்துகொள்ளுங்கள், அந்த வரவேற்பு முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் உங்களுடைய இடத்திற்கு வந்து வரவேற்பில் கலந்து கொள்கிறோம் என்று கூறிவிட்டு இப்போது அதை மறுத்து பேசுகிறார். நான் அவரிடம் தனியாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கேட்கும்போது அ.தி.மு.க. நிர்வாகிகளான ஜாக்லின் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள். இது அவர்களுக்கும் தெரியும். நாங்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயல்படவில்லை. நாங்கள் இணைந்து ஒரே அணியாக முதல்வருக்கான வரவேற்பை கொடுக்கிறோம். ஆனால், இடங்கள்தான் வேறு அனைத்தும் மாநகருக்குள் தான் வருகிறது” என்று கூறி முடித்தார்.
இது சம்பந்தமாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடர்பு கொண்டபோது, “அவரிடம் நான் இணைந்துதான் செயல்பட கூறியிருந்தேன். தனியான வரவேற்பு வழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், இதுகுறித்து நிர்வாகி ஐயப்பன் மூலம் தனியாக செயல்பட வேண்டாம் என்பதை அவரிடம் எடுத்துக் கூறுங்கள் என்றும் கூறி இருந்தேன். ஆனால் கார்த்திகேயன் வட்ட கழக செயலாளர்களை சேர்த்துக்கொண்டு இப்படி தன்னிச்சையாக செயல்படுகிறார். இதை நான் என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை” என்று கூறி இணைப்பை துண்டித்தார்.
இவர்களுடைய இந்த உட்கட்சிப் பூசல் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்து உள்ள நிலையில் பாதுகாப்பு கொடுப்பதிலும் காவல்துறைக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.