நாகர்கோவில், குமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எஸ்.டி.பி.ஐ. எங்கள் கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். இரட்டை இலை கொடுக்கப்பட்டும் ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர் வெற்றிபெறவில்லை.
தமிழக மக்களின் சார்பாக குக்கர் சின்னத்தை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். அதுதான் தமிழகத்தின் தற்போது வரப்போகின்ற மக்களவைத் தேர்தலின்போது பிரதிபலிக்கப்போகிறது. குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஏற்கனவே நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அதனை எங்களின் அணிக்கு நிச்சயம் உச்சநீதிமன்றம் வழங்கும்.
மக்கள் விழிப்புணர்வுடன் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்த காலத்தில் சின்னங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்காது என்றார்.