கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே, வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதும், அதனை பொதுமக்கள் பிடித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ''நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக் கூடாது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மையங்களைப் பாதுகாப்பது நம் கடமை. வேட்பாளர்களும், நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பாதுகாக்கப்பட்ட மையங்களை 24 மணி நேரமும், இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும். வாக்குப்பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் 'டர்ன் டியூட்டி’ அடிப்படையில் கண்காணித்திட வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ''வருகிற 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்'' என கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் கண்டெய்னர் வாகனங்கள் வந்து செல்வதாகவும் எதிர்க்கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பிலும் எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தமிழக சட்டசபை தேர்தல் எவ்வித முறைகேடும் இல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக நன்றி தெரிவிக்கிறது. வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையம் கவனத்துடன் பாதுகாத்து வருகிறது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறைவு என்றும், வாக்குப்பெட்டிகளில் முறைகேடு நடந்துவிடுமோ என்ற சந்தேகம் வருவதாகவும் மனுக்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.
வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு குறித்து திமுக கூட்டணி கட்சிகளே எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால் திமுக மட்டுமே பல்வேறு இடங்களில் மனு கொடுப்பது, தவறான செய்திகளைக் கொடுத்து வருகிறது. ஆணையத்தின் மீது சந்தேகம் இருப்பின் கோர்ட்டுக்கு திமுக செல்லலாமே? வாக்குப்பெட்டிகளை நம்புகிற கட்சி பாஜக, பணப்பெட்டிகளை நம்புகிற கட்சி திமுக. மே 2இல் தெரிந்துவிடும் மக்கள் யார் பக்கமென்று. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு.” இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சியினரிடம் கேட்டபோது, “வேளச்சேரி சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அங்கு தவறு நடக்கவில்லை என்றால் ஏன் மறுவாக்குப்பதிவு நடத்தினார்கள்? பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக தலைவர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஏன் சொன்னார்கள்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். சம்மந்தமில்லாத நபர்கள், வாகனங்கள் செல்லும்போதுதான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதனை புகாராக சொல்லக் கூடாதா?” என கண்டனம் தெரிவித்தனர்.