டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தரகர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டும், விசாரனை செய்யப்பட்டும் வரும் நிலையில், நேற்றைய தினம் முறைகேட்டிற்கு உதவிய தானாக அழியும் மை கொண்ட பேனாவை கண்டுபிடித்தவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.
இன்று, தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார், கம்யூனிச தலைவர் ம.சிங்காரவேலர் பிறந்த தினத்தையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு "கூடி கோஷம் போட்டால் உண்மை மறைந்து விடும் என நினைக்கிறார்கள்; அப்படி நடக்காது. டிஎன்பிஎஸ்சி விவகாரம் தொடர்பாக திமுக ஆட்சியிலும் சோதனை நடந்துள்ளது. 2006- 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. அதிமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால் தான் டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் 40- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்பதாக பதிலளித்தார்.