கடலூர் தெற்கு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகரக் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடுஞ்செயல்களைக் கண்டித்து சிதம்பரம் வடக்கு வீதி தலைமைத் தபால் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்தார். நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தில்லை ஆர். மக்கீன் வரவேற்றார். கடலூர் தெற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் என்.வி. செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் பிபிகே. சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எம்.என். ராதா, மாவட்டத் துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், நகரச் செயல் தலைவர் தில்லை கோ. குமார், மகளிரணி தில்லை செல்வி, கோ. ஜனகம், மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக விடப்பட்ட விஷயம் உலக மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. ஆனால் மோடியின் மனசாட்சியை மட்டும் உலுக்கவில்லை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திரெளபதியைக் கூட துகில் உரித்தார்களே ஒழிய, நிர்வாணமாக்கவில்லை. மோடி ஆட்சியில் நிர்வாணமாக்கப்பட்டதோடு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். பெண்ணினத்திற்கே ஏற்பட்ட கொடுமை.
இதைப் பற்றி மோடியை பேசச் சொன்னால், நான் ராஜஸ்தானை பற்றிப் பேசுவேன், சத்தீஸ்கரை பற்றிப் பேசுவேன் என்று வேறு சில மாநிலங்களின் பெயரைச் சொல்லுகிறார். முதலில் மணிப்பூரைப் பற்றிப் பேசுங்க என்றால் பேச மறுக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதத்திற்குப் பங்கெடுத்துக் கொண்டு பேசமாட்டாரா? நாடாளுமன்றத்தில் பேசுங்க, கண்டிக்கிறேன் என்று சொல்லுங்க. கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்வேன் என்று சொல்லுங்க. தூக்கிலிடுவேன் எனச் சொல்லுங்க. ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் இன்றைக்கு இஸ்லாமியத் தலைவர்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது ஒரு பையன் நேருக்கு நேர் சுட்டுக்கொள்கிறான். பாதுகாப்பாகச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்கிறான். இதுதான் மோடி ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்களைக் கொண்டு மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்க வேண்டும் என்பதுதான். நியாயம் சொல்ல வேண்டிய இடம் மக்கள் மன்றம்தான். மக்கள் மன்றத்திற்கு வந்துள்ளோம். தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள மனிதநேயம் மிக்க அனைவருமே இதற்காகத் திரண்டு எழுந்துள்ளார்கள்.
மோடிக்கு எதிரான மிகப்பெரிய மன உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் புரிந்து கொண்டு அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்கக் கூடாது. குற்றத்திற்குத் துணை போகக் கூடாது. நியாயப்படுத்தக் கூடாது. அண்ணாமலையைப் பொறுத்தவரை நேர்மறை அரசியல் தெரியாது. எதிர்மறை அரசியல்தான் தெரியும். யாரோ அவரிடம் தவறாகச் சொல்லியுள்ளார்கள். ஏட்டிக்குப் போட்டி பேசினால் விளம்பரம் கிடைக்கும் எனச் சொல்லியுள்ளார்கள். நான் ஜனாதிபதியைச் சந்தித்து மோடி அரசில் 50 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது எனச் சொல்லி மனு அளிக்கலாம். அது செய்தியாகலாம், அதில் என்ன உண்மை இருக்க முடியும். பாஜக தலைவர் கே. அண்ணாமலை, குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டே செல்கிறாரே ஒழிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிகிறதா? எதுவும் இல்லை. இதுதான் அவரது அரசியல், அது நல்ல அரசியல் அல்ல.
இந்தியா பெயரில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டணி பயங்கரவாதக் கூட்டணி என்கிறார் மோடி. இந்தியா பெயரில் அதிகமான திட்டங்களை வைத்திருப்பவர் மோடிதான். மோடி அரசின் அனைத்துத் திட்டங்களுக்குப் பின்னால் இந்தியா என்ற வார்த்தை வரும். எனவே இந்தியாவை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். அப்படியென்றால் அவரது இயக்கம், தீவிரவாத இயக்கமா?
அதிமுக என்பது போலி முகம்தான். அதிமுகவிற்கு சமூகப் பிரச்சனையில் அக்கறை கிடையாது. அவர்களால் ஜெயலலிதா சொன்னது போன்று மோடியா? லேடியா? என்று சொல்லத் தைரியம் கிடையாது. அன்றைக்கே பாபர் மசூதி இடிப்பிற்குத் துணை போனவர்கள், அதனை ஆதரித்தவர்கள். ஒரு காலத்திலும் இன்றுள்ள அதிமுக என்பது இதற்காகப் போராடக்கூடிய இயக்கம் அல்ல. அவர்களது இயக்கம் சந்தர்ப்பவாத இயக்கம். எனவே அவர்கள் பாஜக பக்கம்தான் இருப்பார்கள். அவர்களிடம் கொள்கையை எதிர்பார்க்க முடியாது என்று கடுமையாக விமர்சித்தார்.