Published on 01/01/2023 | Edited on 01/01/2023

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மஹாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், “ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை வெடி வைத்து தகர்க்கப் போகிறோம் என மிரட்டல் விடுத்துள்ளார். இதன் பின் அலுவலகத்திற்கு காவல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பினைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு புலனாய்வுப் பிரிவினர் வந்து சோதனை செய்தனர். சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பிடிபடவில்லை. மிரட்டல் கொடுத்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்” எனக் கூறினார்.