Skip to main content

"அண்ணாமலை பற்றி பேசக்கூடிய தகுதி அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கிடையாது" - கரு.நாகராஜன்

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

karu nagarajan says admk former ministers are not qualified to talk about annamalai

 

அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. அப்பொழுது இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இருப்பினும் இரு தரப்பு தலைவர்களும் கூட்டணியில்தான் உள்ளோம் எனத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுக்க, கூட்டணி எல்லாம் மேலே உள்ள டெல்லி தலைவர்கள் எடுக்கும் முடிவு. தமிழக பாஜக தலைவர் சொல்வதெல்லாம் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.

 

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரங்கெட்ட அண்ணாமலை எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்பொழுது அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாஜக மாநிலத் தலைவர், இன்றைக்கு தமிழக மக்களின் இதயக்கனியாக இருக்கக்கூடிய அண்ணாமலை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்றவர்கள் மனதில் தோன்றியது எல்லாம் தரக்குறைவாக ஒரு உள்நோக்கத்துடன் பேசி அண்ணாமலை மீது களங்கம் சுமத்த முயன்றுள்ளார்கள். செல்லூர் ராஜூ தன்னை தலையாட்டி பொம்மை போல் நினைத்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு தமிழக மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை தரக்கூடிய நிலையை அண்ணாமலை உருவாக்கி உள்ளார். அண்ணாமலை பற்றி பேசுகிற அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு அண்ணாமலை அளவுக்கு தகுதியான சக்தியோ பலமோ மக்களின் தலைமையை ஏற்கக்கூடிய  பிரதிநிதித்துவ ஆற்றலோ கிடையாது. அண்ணாமலை பற்றி பேசக்கூடிய தகுதி  கூட இந்த மூவருக்கும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்