சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்பியவர் விஜயகாந்த், அக்கட்சியை சேர்ந்த 37 எம்.பி.க்கள் இருந்தும் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போய் விட்டது என விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜிடம் பிரேமலதா கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், 37 எம்.பி.க்களால் பலனில்லை என்று பிரேமலதா சொல்வது அவருடைய சொந்த கருத்து. தே.மு.தி.க.வை தமிழ்நாடே பார்க்கிறது. இங்கொன்றும், அங்கொன்றும் என தே.மு.தி.க. இரு பக்கமும் பேசுகின்றது. தே.மு.தி.க. இரு கட்சிகளுடனும் பேசியது மிகப்பெரிய தவறு.
நாகரிகம் தெரியாமல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. வீழ்ச்சிக்கு காரணம். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தால் அதன் மூலம் அ.தி.மு.க.விற்கு ஒரு 500, 1000 ஓட்டு கிடைக்கும். அது எங்களுக்கு நல்லது தானே. இவ்வாறு கூறினார்.