நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழகத்திற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், “தமிழ்நாட்டின் குரலாக உங்களின் குரலாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்; ஒட்டுமொத்த இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்; குரலற்றவர்களின் குரலாக தம்பி திருமாவளவன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
திருமாவளவன் பல பட்டங்களை பெற்றிருக்கிறார். ஆனால் நான் அவருக்கு கொடுத்த பட்டம் தன்னிகரில்லா தமிழர். எனக்கு திருமாவளவன் வயதில் தான் தம்பியே தவிர அரசியலில் மூத்தவர். என்னுடைய ஒரே அரசியல் எதிரி சாதியம் தான்; அதனை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நீங்கள் பெரிய அரசியல் ஞானி ஆக இருக்கலாம் ஆனால் மக்களை மதிக்காத யானைக்கும் ஒரு நாள் அடி சறுக்கும். அப்போது வருவீர்கள் வழிக்கு.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்த காரணம் இன்னும் எத்தனை பேர் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுப்பதற்காகத்தான். நூறு வருடத்திற்கு முன்பு இப்படி ஒரு கூட்டத்தை கூட்டி இருக்கவே முடியாது. அதற்குக் காரணம் பெரும் தலைவர்கள் சிந்தி இருக்கும் ரத்தம் வியர்வை உழைப்பு. அதன் நீட்சியாக வந்திருக்கும் நீங்கள். தம்பி திருமாவளவன் போன்றவர்கள் தாமதமாக வந்தாலும் வந்தோமே என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் என் போன்றவர்கள்.
கலைஞனுக்கு டி.என்.ஏ.விலேயே சமத்துவம் தெரியும். அவன் எல்லாருக்காகவும் ஆடுவான். திரையரங்கில் பக்கத்து இருக்கையில் இருக்கும் ஒருவனைப் பார்த்து நீங்கள் எந்த சாதி என்று கேட்க முடியாது. அப்படிப்பட்ட கூட்டத்தை வெட்ட வெளியில் கூட்டி இருக்கிறோம் நாங்கள். அதற்காக உழைத்தவர்கள் பலர். அதில் இவரும் ஒருவர். முன்பு வேறு மாதிரியாக பேசுனீர்கள் தற்போது கொஞ்சி குலாவுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் நேர்மையான நியாயமான ஜனநாயக அரசியல். அம்பேத்கர் எங்களுக்கு கற்றுக் கொடுத்த அரசியல். சுபாஷ் சந்திர போஸ் கற்றுக் கொடுத்த அரசியல். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், நாட்டின் நலனுக்காக காந்தி கூப்பிட்ட குரலில் குரலில் ஓடிவந்தவர் அம்பேத்கர். அப்படித்தான் நாட்டுக்கு ஆபத்து என்று வரும்போது நாங்களும் தோளோடு தோல் சேர்ந்து இணையத்தான் வேண்டும். திருமாவளவன் தியாகம் பண்ணி விட்டார் என்று நினைக்காதீர்கள் அது வியூகம். 25 ஆண்டுகள் ஒரே பாதை பயணித்துக் கொண்டிருக்கும் இவர் எனக்கு சகோதரர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். திராவிட மாடல் என்று கிண்டல் செய்யாதீர்கள் திராவிடம் நாடு தழுவியது.
புரட்சி பொங்கும் பானை. அதை சமைத்தவர்கள் மட்டும் தான் கை வைக்க முடியும். இந்த பானையிலிருந்து சோற்றை அல்ல முதலில் கிழக்கிந்திய கம்பெனி என்று லண்டனில் இருந்து வெள்ளைக்காரன் வந்தான். அவனுக்கு பிறகு தற்போது மேற்கிந்திய கம்பெனி குஜராத்தில் இருந்து ஒன்று வந்திருக்கு. அவன் விதித்தது போன்று இவர்களும் வரி விதிக்கிறார்கள். ஜி.எஸ். டி என்று வரி. இது போன்ற பல குற்றங்களை பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. இணையும் இது நீலமாகாமல் இருக்க அதைத் தடுப்பதற்கான தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. விரல் அசைவில் அது நின்றுவிடும்.
2009-இல் திருமாவளவன் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ஆனால் 2019 ஆம் ஆண்டு சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்கள். கொஞ்சம் பதற்றம் இருந்தது. தம்பி உதயநிதி இங்கு வந்த போது எந்த கொம்பனாலும் திருமாவளவனை அசைக்க முடியாது என்றார். ஆனால் நான் பேராசை பிடித்தவன் எனக்கு 6 லட்சம் போதாது 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவனை வெற்றி பெற வைக்க வேண்டும். இப்படி வெற்றி பெற்று அதற்கான விழாவுக்காக நாங்கள் இங்கு வரும்பொழுது மக்கள் நீதி மையத்தின் தொண்டர்கள் நாங்களும் தான் வெற்றி பெற்றோம் என்று மார்தட்டிக் கொள்வார்கள்.
இந்தியாவே சிதம்பரத்தை திரும்பி பார்க்க வேண்டும். தலைவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்காகவும் குரல் குரல் கொடுப்பவர். வாக்குறுதி அல்ல; நான் பார்த்ததை கூறுகிறேன். நான்தான் சாட்சி. கலங்கமற்ற கருப்பு வைரம் தம்பி திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.