ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளது. இத்தொகுதியில் ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டதால் இந்த முறையும் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் அதிமுக அணியில் சென்ற முறை தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது இந்த முறை இத்தொகுதியில் அதிமுகவே நேரடியாக களம் காண உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிடுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சியோடு திமுக தலைமை கலந்து ஆலோசித்து இத்தொகுதியை காங்கிரஸூக்கே வழங்கியிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிச்சியம் வெற்றி பெறுவார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணியாற்றுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மாநில, தேசிய அளவிலான நிர்வாகிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு முழு ஆதரவையும் கொடுக்கும்” என்றார்.