‘என்னைக் குறை கூறி ‘ஒன்று’ சொன்னால், பதிலுக்கு நான் ‘பத்து’ சொல்வேன்’ என்ற ‘கொள்கை’ உடையவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அமைச்சர் என்ற முறையில் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறதென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உதாரணம்’ காட்டி விமர்சித்ததோடு, ’வாழ்நாள் முழுவதும் ராஜேந்திரபாலாஜி சிறையில் இருக்கவேண்டும்.’ என்று ‘தமிழகம் மீட்போம்!’ உரையில் விளாசிவிட்டார்.
ஏற்கனவே, எடப்பாடியால் ஸ்டாலினுக்கு எதிராகக் கொம்பு சீவிவிடப்பட்ட ராஜேந்திரபாலாஜி, தன்னைக் குறிவைத்து ஸ்டாலின் குற்றம் சாட்டியதால், திமுகவையும், அதன் தலைவர்களையும், கேலியும் கிண்டலுமாக, வரைமுறை இல்லாமல் வறுத்தெடுத்துவிட்டு, ‘கம்ப்யூட்டர் ரூம் அரசியலை தூக்கியெறிந்துவிட்டு, எங்க ஊருக்குப் வந்து பேச முடியுமா?’ என்று சவால் விட்டார்.
எதிர்ப்பில் ஆவேசம் இல்லை!
‘எங்களின் தளபதியை தரக்குறைவாகப் பேசிய ராஜேந்திரபாலாஜி, இனி விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் பண்ண முடியாது.’ என்று இம்மாவட்டச் செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும் கூட்டாகப் பேட்டியளித்தாலும், ‘அத்தனை காரசாரமாக இல்லை’ என்று கொந்தளிக்கின்றனர் உ.பி.க்கள்.
தமிழகத்தில் பல இடங்களிலும் ‘ரத்தம் கொதிக்கிறது’ என்று சிலிர்த்த சில திமுகவினர், ராஜேந்திரபாலாஜியை நாரச நடையில் திட்டிய வீடியோவை, யூ டியூபில் வெளியிட்டு திருப்தி அடைய, ‘இதெல்லாம் போதாது..’ என்று, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரனின் மகன் ஒருவர், “இப்பவே 50 பைக்குகளில் இளைஞர்களைத் திரட்டி ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்குப் போவோம்..” என்று அடிமட்டத் தொண்டர்களிடம் கலந்தாலோசித்த போது, “அதெல்லாம் சரியா வராது. நாம பிரச்சனை பண்ணி, அது பெரிசாயிட்டா, பின்னாளில் கட்சி நம்மைக் காப்பாத்தாது. வேணும்னா.. இந்தப் பக்கம் ராஜேந்திரபாலாஜி வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்.” எனப் பேசி சமாதானமாகிவிட்டனர். அதன்பிறகு, ‘மந்திரி புண்ணியத்துல இவரு ஒவ்வொரு பாருக்கும் போயி மாமூல் வாங்குறாரு. அப்புறம் எப்படி மந்திரிய எதிர்ப்பாரு? நம்மகிட்டயே சீன் போடறாரு..’ என்று மாவீரன் மகன் குறித்து கமெண்ட் அடித்துச் சிரித்திருக்கின்றனர்.
தி.மு.க தொண்டர்களின் மனக்குறை என்னவென்றால், ‘ஸ்டாலினை விமர்சித்தபோது ராஜேந்திரபாலாஜியின் குரல் நாபிக்கமலத்தில் இருந்து ஆவேசமாக வெளிப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கிறோம் என்று பேட்டியளித்த கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தங்கம் தென்னரசுவும் சுரத்தே இல்லாமல், கம்மிய குரலில் அல்லவா பேசினார்கள்? அப்போது, தங்கம் தென்னரசாவது நேரடியாக ராஜேந்திரபாலாஜியை தாக்கிப் பேசினார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். பட்டும் படாமலும் தடவிக்கொடுத்தது போல் பொத்தாம் பொதுவாக அல்லவா பேசினார்? இவர்களின் ‘அன்டர்ஸ்டேன்டிங் பாலிடிக்ஸ்’ எங்களுக்குத் தெரியாதா? இருக்கன்குடி பக்கம் திமுக எம்.பி.யால் மணல் குவாரி ஓட்ட முடிகிறதென்றால், அமைச்சரின் ஆசி இல்லாமலா இருக்கும்? மாவட்டத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஆளும்கட்சியோடு ஒத்துப்போகும்போது, தொண்டர்கள் நாம் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு ஒன்றும் பண்ணிவிட முடியாது.’ என்பதுதான்.
அடக்கி வாசிக்கும் அமைச்சர்களின் சுயநலம்!
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்களோ, வேறு விதமாக ‘ரியாக்ட்’ பண்ணுகின்றனர். “தமிழக அமைச்சர்களில், ஜாதிப் பின்புலம் உள்ளவர்கள், வீரன் சூரனென்று சொல்லிக்கொள்பவர்கள் யாரேனும், திமுகவையோ, ஸ்டாலினையோ நேரடியாக தாக்கிப் பேசுகிறார்களா? எல்லாருக்குமே பயம். ‘அடுத்து தி.மு.க ஆட்சிதான்! ஸ்டாலின்தான் முதல்வர்!’ என்ற நிஜநிலவரம் அறிந்து பம்முகின்றனர். ‘ஆயிரமாயிரம் கோடிகளைச் சம்பாதித்துவிட்டோம். திமுகவை பகைத்துக்கொண்டு வழக்கு, சிறை என்று சிக்கிவிடக்கூடாது’ என்ற சுயநலத்தின் காரணமாகவே, அவர்கள் திமுகவுக்கு எதிராகச் சத்தமாக வாய் திறப்பதில்லை.
ஸ்டாலினுக்கு எதிராக ராஜேந்திரபாலாஜி மட்டும் ஏன் அனல் கக்குகிறார்? எம்.ஜி.ஆரை போலவே, சாகும் வரையிலும் கலைஞரையும் திமுகவையும் முழுமூச்சாக எதிர்த்தவர் ஜெயலலிதா. இரட்டை இலை அபிமானிகளின் கோபதாபங்களும் திமுகவுக்கு எதிரானதுதான். அதனால்தான், ராஜேந்திரபாலாஜியின் ஆவேசப் பேட்டியை, அ.தி.மு.க ஐ.டி. விங் மூலம், ஒரு பிரச்சாரமாகவே பரப்பி வருகின்றனர். ஸ்டாலினோடு மோதவிட்டு ராஜேந்திரபாலாஜியை எப்படியும் பலிகடா ஆக்கிவிடுவார் எடப்பாடி.” என ‘உச்’ கொட்டுகின்றனர்.
இவரைப்போல எவருமில்லை!
ராஜேந்திரபாலாஜி விசுவாசிகளோ “தொண்டர்களைச் சோர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், தலைவர்களின் பேச்சும் செயலும் தொண்டர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. அவர் வெளிப்படையானவர். மதரீதியிலான கருத்து ஒன்றைச் சொன்னால், தனது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதை அறியாதவரல்ல.
ஆனாலும், தன் மனதுக்குத் தோன்றியதைப் பேசினார். ‘விருதுநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பார்கள். ராஜேந்திரபாலாஜியை டம்மியாக்கிவிடுவார்கள்.’ என்று இப்போதும் பேசத்தான் செய்கிறார்கள். கடந்த 10 வருடங்களாக மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்துவிட்டார். பறிபோன மாவட்டச் செயலாளர் பொறுப்பை, தனக்கே தலைமை மீண்டும் தரவேண்டும் என்ற பரிதவிப்பெல்லாம் அவருக்கு இல்லை.
வரும் தேர்தலில், எம்.எல்.ஏ. சீட் தரவில்லையென்றாலும் கூட, அவர் அலட்டிக்கொள்ள மாட்டார். அவருடைய தற்போதைய நாட்டமெல்லாம் ஆன்மிகமும் மக்கள் சேவையும்தான். பணத்தைப் பணமென்று பார்க்காமல், ராஜேந்திரபாலாஜி அளவுக்கு, நலிந்தோருக்கு லட்சம் லட்சமாக அள்ளித்தரும் அரசியல் தலைவர்கள், தமிழகத்தில் எங்களுக்குத் தெரிந்து யாருமில்லை. எந்த அரசியல் தலைவர் வீட்டிலும், உதவி கேட்டு, இந்த அளவுக்கு மக்கள் கூடுவதில்லை. அவரும், இலவச மருத்துவமனை கட்டப் போகிறேன்; முதியோர் இல்லம் கட்டப் போகிறேன் என்கிறார். என்னிடம் என்னென்ன இருக்கிறதோ, அனைத்தையும் மக்களுக்கே கொடுத்துவிடுவேன் எனச் சொல்லி வருகிறார். ஆனாலும், ஒவ்வொரு பிரச்சனையாக அவரைத் துரத்தியபடியே இருக்கிறது. அவர் செய்துவரும் தர்மமே, அவரைக் காத்துவருகிறது.” என்றனர்.
பலசாலி யாரென்று பார்ப்போம்!
நடுநிலை அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் “ராஜேந்திரபாலாஜியை, கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிவிட முடியாது. பொது வாழ்க்கையில் எந்த அளவுக்கு நல்லவரோ, அரசியலில் அந்த அளவுக்கு வல்லவனுக்கு வல்லவர். இந்த மாவட்டத்துல ஏழு தொகுதில நாலு தொகுதி திமுகவுக்கு போனதுக்குக் காரணம் ராஜேந்திரபாலாஜியின் அனுசரித்துப்போற அரசியல்தான். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. மாவட்டம் முழுவதும் எனக்கே செல்வாக்கு இருக்குன்னு கட்சி நிர்வாகிகள் சிலரை கூட்டிட்டு போயி, சென்னையில ராஜவர்மன் அடிக்கடி டேரா போடறாரு. வர்ற தேர்தல்ல ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மனோட பலம் என்னன்னு பார்த்திருவோம்.
அருப்புக்கோட்டை தொகுதில கே.கே.எஸ்.எஸ்.ஆரோட ராஜேந்திரபாலாஜி மோதட்டும். திருச்சுழி தொகுதில தங்கம் தென்னரசுவோட ராஜவர்மன் மோதட்டும். ராஜேந்திரபாலாஜி பிறந்தது அருப்புக்கோட்டை தொகுதியில்தான். முக்குலத்தோர் எல்லாரும் என் பக்கம்னு சொல்லிக்கிட்டிருக்காரு ராஜவர்மன். திருச்சுழி தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகளே அதிகம். அதனால, ராஜேந்திரபாலாஜியும், ராஜவர்மனும் இந்த ரெண்டு தொகுதிலயும் போட்டி போடணும். கடந்த தேர்தலில் ஜெயலலிதா, கே.பி.முனியசாமியை பென்னாகரத்திலும், நத்தம் விஸ்வநாதனை ஆத்தூரிலும், செந்தில்பாலாஜியை அரவக்குறிச்சியிலும் தொகுதி மாற்றிப் போட்டியிட வைத்தாரல்லவா? அதுபோலத்தான் இதுவும்! எடப்பாடி செய்வாரா?” எனக் கேட்டனர்.
ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் மோதிக்கொள்வதுதானே அரசியல்!