அதிமுகவில் பிளவு பிரிவு என எதுவும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் பிரிவு பிளவு என்று ஊடகங்கள்தான் மாயையை உருவாக்குகின்றன. பிரிவும் இல்லை; பிளவும் இல்லை. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிளைக் கழகத்திலிருந்து தலைமைக் கழக நிர்வாகிகள் வரை அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் ஒன்றாக இருக்கின்றோம். கண்டிப்பாக எவ்விதமான பிரச்சனையும் பிளவும் கட்சிக்குள் இல்லை.
அதிமுகவில் பிளவும் பிரிவும் இருக்கிறது என்று அண்ணாமலை உங்களுக்கு எழுதிக் கொடுத்தாரா? விமான நிலையத்தில் அண்ணாமலை கொடுத்த பேட்டியில் என்ன சொல்லியுள்ளார். வலுவான எதிர்க்கட்சி என்று பார்த்தால் அது அதிமுக தான் எனக் கூறியுள்ளார். திமுகவை எதிர்க்க வல்லமை கொண்டதும் அதிமுக தான். அதிமுக அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு அதிகமாக செய்துள்ளார்கள். அப்படி இருக்கையில் அதிமுக நிற்பதுதான் சாலச் சிறந்தது என அண்ணாமலை சொல்லியுள்ளார்.
அப்படி அவர் சொல்வது போல் அதிமுக பலம் வாய்ந்தது தான். அது பாஜகவிற்கு தெரிகிறது. அந்த கருத்தில் தான் அண்ணாமலை அதை சொல்லியுள்ளார். அதனால் கட்சி நாங்கள் தான். இரட்டை இலை நாங்கள் தான். அதில் எந்த வகையான மாறுபட்ட கருத்தும் கிடையாது” எனக் கூறினார்.