முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 2016ம் ஆண்டு டிச.5ம் தேதி மறைந்தார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெ. மரணம் குறித்து விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா டிச.4ம் தேதியே மறைந்துவிட்டார் என்று கூறியது. டிசம்பர் 4ஆம் தேதியான இன்று ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் அடுத்த ஆண்டாவது ஜெ. மரண தினமாக இன்று (டிச.4) அனுசரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்றைக்குத்தான். ஜெயலலிதா மறைந்தது டிசம்பர் 4 ஆம் தேதி தான். ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலக வேண்டும். அதற்கு ஆணையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் தான். அந்த கோரிக்கையை ஏற்று ஆணையத்தை அமைத்தவர் ஈபிஎஸ். துரதிர்ஷ்டவசமாக ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு இன்று ஜெயலலிதாவின் நினைவு தினமாக இன்று அனுசரித்து இருக்க வேண்டும். அவர்கள் அனுசரிக்கத் தவறிவிட்டார்கள்.
அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் பிரதிநிதியாக நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் படி மத்திய அரசும் மாநில அரசும் மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு இரு விஷயங்களில் சமரசம் இல்லை. ஜெ.வின் மரணத்தில் இருக்கும் மர்மத்திற்குக் காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது. இரண்டாவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டர்களின் பிரதிபலிப்பாக நாங்கள் மவுன அஞ்சலி செலுத்துகிறோம்.
ஜெ. மரண தேதியை அவர்கள் இதுவரை தெரியாமல் கூடச் சொல்லி இருக்கலாம். ஆனால் ஆணையத்தை அமைத்தது யார். அமைக்கச் சொல்லிக் கேட்டது யார் ஓபிஎஸ். அப்பொழுது ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை இருவரும் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இவர்களால் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு அடுத்த ஆண்டாவது கடைப்பிடிக்க வலியுறுத்துகிறோம்.
இந்த ஆணையம் திமுகவால் அமைக்கப்பட்ட ஆணையம் அல்ல. அதிமுகவால் அமைக்கப்பட்டது. அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் ஓபிஎஸ். அவர்கள் மறந்தாலும் உண்மையான அதிமுக தொண்டர்கள் டிசம்பர் 4ஆம் தேதியை ஏற்றுக்கொண்டார்கள்” எனக் கூறினார்.