திமுகவின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.கே.வின் ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. அன்பழகனின் அதிரடி பேச்சுதான் தி.மு.க.வில் இப்போது ஹை-லைட்டாக இருக்கிறது.
’ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தின் மூலம் நடக்கும் நிவாரணப் பணிகள் குறித்தும், கரோனாவை தடுப்பதில் தி.மு.க.வினரின் பங்களிப்பு குறித்தும் திமுக மா.செ.க்களுடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின். அப்போது பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாக முடித்ததையும், என்னென்ன பிரச்சனைகள் இருந்தது; அதனை எப்படிச் சரி செய்தோம் எனவும் விவரித்தார்கள்.
மற்றபடி, நிவாரணம் வழங்குவதில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஸ்டாலினிடம் அவர்கள் விவரிக்கவில்லை. குறிப்பாக, பி.கே.வின் ஐ-பேக் நிறுவன தரப்பிலிருந்து தரப்படும் நெருக்கடிகளை அவர்கள் தெரிவிக்க அச்சப்பட்டனர். இந்த நிலையில்தான், ஜெ.அன்பழகனின் பேச்சு தி.மு.க. மா.செ.க்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பொதுவாக, தி.மு.க.வின் ஆலோசனைக் கூட்டம் என்றாலே அதிரடியாகப் பேசுபவர் ஜெ.அன்பழகன். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி பழகியவர். கலைஞர் உயிரோடு இருந்தபோது அவர் கொடுத்த சுதந்திரம்தான் அன்பழகனை வெளிப்படையாகப் பிரச்சனைகளைப் பேச வைத்தது. அதனை இப்போது வரை கடைப்பிடித்து வருகிறார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ’’தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் அல்லது 2021-இல் தேர்தல் வந்தாலும் தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக்கும். நீங்கள்தான் (ஸ்டாலின்) முதல்வர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. தி.மு.க.வின் உழைப்பு, தி.மு.க. மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஆகியவைகள் அனைத்தும் தி.மு.க.வை இயல்பாகவே ஜெயிக்க வைக்கும். இன்னும் சொல்லப்போனால் கூட்டணி இல்லாமலே தி.மு.க.வால் ஜெயிக்க முடியும்.
அப்படியிருக்கும் போது, நம்மை ஜெயிக்க வைக்க ஐ-பேக் என்கிற கம்பெனி எதுக்கு? தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் சொல்ல ஒரு நிறுவனம் நமக்குத் தேவையா? மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது; அவர்கள் உங்களை முதல்வராக்க முடிவு செய்து விட்டனர். ஐ-பேக் நிறுவனத்தால் தி.மு.க.வுக்கு லாபமில்லை. தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்திருக்கும் நிலையில், அந்த வெற்றியில் ஐ-பேக் குளிர் காய நினைக்கிறது.
அந்தக் கம்பெனி உங்ளுக்கு வேலை செய்யட்டும்; எங்களுக்கு வேண்டாம். நான் அரசியலுக்கு வந்த போது பிறக்காத சின்னச் சின்ன பொடியன்கள் எல்லாம் என்னிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள். இது சரியில்லை. மனதில் பட்டதையும் இருக்கும் சூழலையும் வெளிப்படையாகப் பேசுகிறேன். என்னுடைய ஆதங்கம் போல, எல்லா மா.செ.க்களுக்கும் இருக்கிறது. அவர்களுக்குப் பேசுவதற்குத் தைரியம் இல்லை. நான் பேசுகிறேன்.
மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களோடு நெருக்கமாக இருக்கும் கட்சி தான் திமுக. மக்களுக்காக நாம் அரசியல் கட்சி நடத்துகிறோம். கம்பெனி நடத்தவில்லை. கம்பெனிகளுக்குத்தான் ஆலோசனை சொல்ல டீம் வேண்டும்? நமக்கு எதற்கு?’’ என மிக அதிரடியாகப் பேசினார் ஜெ.அன்பழகன். அவருடைய பேச்சில் மா.செ.க்கள் எல்லோரும் மகிழ்ந்து போனார்கள். தங்களால் பேச முடியாததை அன்பழகன் வழியாகப் பலரும் பேச வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி.
அன்பழகனின் பேச்சைக் கவனமாகக் கவனித்த மு.க.ஸ்டாலின், இறுதியாக பேசிய போது, ’’ஐ.பேக் நிறுவனம் நம் கட்சி சீனியர்களையோ நிர்வாகிகளையோ வழி நடத்தாது என்பதை பல முறை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் என்னிடம் மட்டும்தான் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். கட்சி நிர்வாகத்தில் அவர்கள் தலையிட மாட்டார்கள்’’ என உறுதி தந்திருக்கிறார்.