அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜக தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்காக ஓ.பி.எஸ். டெல்லி சென்றுவிட்டு திரும்பினார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், “ஒருங்கிணைப்பாளர் டெல்லியில் இருந்து வந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திக்க இருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்துதான் ஓ.பி.எஸ். தனது முதல் சுற்றுப் பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த 26ம் தேதி சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஓ.பி.எஸ்-க்கு முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டு தாரை தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு உசிலம்பட்டியில் அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் வரவேற்பு கொடுத்தனர். அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சொந்த ஊரான தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதிக்கு வந்த ஓ.பி.எஸ் அங்குள்ள சாஸ்தா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரம், ஒன்றியம் மற்றும் பேரூர் அதிமுக சார்பில் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக் கணக்கானோர் கணவாய் பகுதிக்கு வந்தனர். மாலை அணி வித்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர், தனது குழந்தையை கொடுத்து பெயர் வைக்கச் சொன்னார். கட்சிப் பொறுப்பாளர் ஒருவர், செங்கோல் வாளை ஓபிஎஸ்-க்கு கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, தேனிக்கு புறப்பட்டார் ஓ.பி.எஸ். அப்போது மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவாக தேனி மாவட்ட பாஜக தலைவர் பாண்டியன் தலைமையிலான பி.ஜே.பி.னர் துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர். ஓபிஎஸ் வருவதை கண்டு வரவேற்று காவி துண்டை அணிவித்தனர். அப்போது, ‘நாங்க எப்பவும் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்’ என்றார். அதற்கு ஒபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் நன்றி தெரிவித்தவுடனே ஓ.பி.எஸ் தனது கழுத்தில் இருந்த காவி துண்டை டென்ஷன்னுடனே தானே எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அதன் பின்னர் கண்டமனூர் விலக்கு வழியாக தேனி வந்த ஓ.பி.எஸ்-க்கு பங்களாமேடு, நேரு சிலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் எதிர்பார்த்த அளவு ஆதரவாளர்களும் தொண்டர்களும் இல்லை. காரணம் தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், அவரது ஆதரவாளர்களுடன் இ.பி.எஸ் அணிக்கு சென்றதால் தேனி நகரத்திலும், அல்லிநகரத்திலும் ஒபிஎஸ்-க்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
பின்னர் அல்லிநகரம், லட்சுமிபுரம் வழியாக சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்த ஓ.பி.எஸ்-க்கு பெருந்திரளான தொண்டர்களும் ஆதரவாளர்களும் வரவேற்பு கொடுத்து மாலை சால்வைகளை கொடுத்தனர். அங்கிருந்து ஓ.ராஜா வீட்டுக்கு சென்றுவிட்டு, தனது வீட்டுக்கு சென்றார். அ.தி.மு.க.விலிருந்து ஓ. ராஜா நீக்கப்பட்டிருந்தும் ஆண்டிபட்டி கனவாலிருந்து தொடர்ந்து ஓ.பி.எஸ் பின்னாடியே ஓ. ராஜா வந்தார்.
எடப்பாடி ஆதரவாளர்கள் மூலம் ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டு இருந்தாலும், அதிமுக கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஓ.பி.எஸ்.க்கு செல்வாக்கு இருக்கிறது.