அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்காவது நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நடத்த வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தில் ரெய்டு நடப்பது என்பது புதிது அல்ல. இதற்கு முன்பு பல காலகட்டத்தில் பல ரெய்டுகள் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெறும் ரெய்டின் தன்மையை பார்க்கும் பொழுது ஐந்து நாள், ஆறு நாள், ஏழு நாள், எட்டு நாள் என நாட்களில் அதிகப்படியான நாட்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகிறது.
ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அண்மையில் ரெய்டு நடைபெற்றது. தற்போது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. பாஜக வைக்கக்கூடிய குற்றச்சாட்டு இந்த அரசு கிட்டத்தட்ட ஊழல் நிறைந்த அரசாக மாறியிருக்கிறது. எல்லாத்துறையிலும் ஊழல் படர்ந்து இருக்கிறது. அதை பார்த்து ஏஜென்சி கொடுத்த தகவலின்படி இந்த ரெய்டு நடத்துகிறார்கள்.
இந்த சோதனையின் தாக்கம் என்பது சிறைக்கு அனுப்பக் கூடிய அதிகாரம் வருமான வரித்துறைக்கு இல்லை. இந்தியாவின் வருமான வரித்துறையின் நேச்சர் என்பது இல்லீகல் சொத்துக்களை கண்டுபிடித்து அதன் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்து கோர்ட்டில் சமர்ப்பிப்பது போன்ற அமைப்புதான் இருக்கிறது. ஆனால் இ.டியை பொறுத்தவரை பனிஷ்மென்ட் மற்றும் கைது செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது” என்றார்.