





இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்திவருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மநீம கட்சி முதலில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என தகவல்கள் வெளியாகின. பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து அதில், மநீம கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மநீம சார்பில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை திமுக வேட்பாளர்களும், அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில், சில தினங்களுக்கு சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. பொதுச் செயலாளர் டாக்டர். ரவிகுமார் ஆகியோர் கமல்ஹாசனை சந்தித்தனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலாகிருஷ்ணன், ஜி. ராமாகிருஷ்ணன், கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தனர். முன்பு தி.மு.க. தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கமல்ஹாசனை சந்தித்தார். நேற்று தி.மு.க. வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியும், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறனும் மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில், அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இருந்தனர். இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.