தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பா.ம.க. 10 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் வரும் 06/04/2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், கீழ்க்கண்ட 09 தொகுதிகளில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல், மருத்துவர் இராமதாஸ் மற்றும் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
அதன்படி, மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, விருத்தாசலம்- ஜே.கார்த்திகேயன், நெய்வேலி- கோ.ஜெகன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி- ஏ.வி.ஏ. கஸ்ஸாலி, கும்மிடிப்பூண்டி- எம்.பிரகாஷ், சோளிங்கர்- அ.ம. கிருஷ்ணன், கீழ்வேளூர் (தனி)- வேத.முகுந்தன், மைலம்- சி.சிவக்குமார், காஞ்சிபுரம்- பெ. மகேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்". இவ்வாறு பா.ம.க. தலைவர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.