நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கின்றனர். இதே போல் இன்னும் ஒரு சில மாநிலங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து அந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க பாஜக தலைமை திட்டம் போட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர். ஏற்கனவே 17 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. நேற்று கர்நாடகாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற்றதால் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18 மாநிலங்களாக உயர்ந்துள்ளது.