எம்.எல்.ஏ. என்ற அங்கீகாரம், பொதுவாழ்க்கையில் கிடைக்கும் புகழ் என்பதெல்லாம், அரசியல் வாழ்க்கையில் பலருக்கும் தற்காலிகமானதே! ஆனாலும், இந்த உண்மையை முதன்முதலில் அனுபவரீதியாக உணரும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனவலியைச் சொல்லி மாளாது. விருதுநகர் மாவட்டத்திலும், வேட்பாளர் அறிவிப்பால், ஆதங்கம், ஆத்திரம், சோகம் சூழப்பட்ட நிலையில் ஆளும்கட்சியைச் சேர்ந்த மூவர் உள்ளனர்.
சாத்தூர் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு நிச்சயமாக சீட் கிடைக்காது என்பது, அக்கட்சியினர் பலருக்கும் முன்பே தெரிந்த விஷயம்தான். ஏனென்றால், ராஜேந்திரபாலாஜியுடனான நட்பு பகையாக மாறி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பகிரங்கமாக மேடையிலேயே பேசிவிட்டார் ராஜவர்மன். ஆனாலும், ராஜேந்திரபாலாஜியையும் மீறி, கட்சித் தலைமையின் கரிசனத்தால் சீட் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில், தொகுதி மக்களின் நல்லது கெட்டதுகள் அனைத்திலும் கலந்துகொண்டு, சுறுசுறுப்பு காட்டிவந்தார்.
ராஜேந்திரபாலாஜியோ ‘உன்னை விட்டேனா பார்..’ என்று அவருக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆனாலும், பகை அரசியலால் வெறுத்துப்போன ராஜவர்மன், டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்துவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், அவருடைய ஆதரவாளர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ‘பிரச்சாரத்துக்கு வாகனமெல்லாம் ரெடி பண்ணச் சொன்னார் ராஜேந்திரபாலாஜி. வாகனத்தின் நம்பரைக்கூட அவரே தேர்வு செய்தார். கடைசி நேரத்தில், சீட் கிடைக்கவிடாமல் செய்துவிட்டார்’ என்று சந்திரபிரபா கணவர் முத்தையா புலம்பி வருகிறார்.
விருதுநகர் அதிமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது, பணத்தை வாரியிறைக்கக் கூடியவர் என்பதால், மா.செ. ராஜேந்திரபாலாஜியால் புதிதாக திணிக்கப்பட்டவர் கோகுலம் தங்கராஜ். ஆனாலும், அக்கட்சியினரில் பலரும் அவரை ஏற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது ஒத்துழைத்தனர். ‘எம்.எல்.ஏ. சீட் தனக்கே!’ என்ற எண்ணத்தில், இந்தக் கரோனா காலக்கட்டத்தில், தொகுதி முழுவதும் அரிசிப்பை வழங்கி, கோடிகளில் செலவழித்தார். ஆனால், விருதுநகர் தொகுதி, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்குப் போய்விட்டது. அதனால் நொந்துபோன கோகுலம் தங்கராஜ், ‘ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டாரே!’ என்று ராஜேந்திரபாலாஜிக்கு எதிராகப் பேசி வருகிறார். ‘விருதுநகரில் நான் சிந்திய வியர்வையும், சேவையும் வீண் போகாது..’ என்று சுயேச்சையாகக் களமிறங்க தயாராகி வருகிறார்.
இம்மாவட்ட அதிமுக சீனியர் கண்ணன், “உயிரோ, இந்த வாழ்க்கையோ நிலையில்லாதது. எம்.எல்.ஏ. பதவி எம்மாத்திரம்? தொடர்ந்து நானே எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசையும் கூட ஏற்புடையதல்ல. ‘வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகுதியில் இவரே எம்.எல்.ஏ., இந்த மாவட்டத்தில் இவரே அமைச்சர்..’ என்பதெல்லாம் திமுகவுக்குத்தான் சரியாக வரும். அதிமுக அப்படி கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரையிலும் கடைப்பிடித்துவந்த நிலைப்பாடுதான், இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது” என்றார்.