Skip to main content

துரைமுருகன் வீட்டில் சோதனை -பின்னணியில் யார்?

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

 

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். மகனுக்காக பல்வேறு வியூகங்களில் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் துரைமுருகன். 

 

இந்த நிலையில் 29ஆம் தேதி இரவு காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்திற்கு இரவு 10.30 மணிக்கு வந்த மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகிய 3 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக துரைமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் வந்தார். பின்னர் அவர் தனது வழக்கறிஞர்களை வரவழைத்தார். வந்தவர்களிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அந்த அடையாள அட்டையில் அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி விஜய் தீபன், தன்னுடைய தலைமையிலான குழுவினர்தான் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். சோதனை நடத்துவதற்கான வாரண்ட் காண்பிக்கப்படாததால் இருதரப்பும் வாக்குவாதம் நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் வீட்டினுள் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
 



இதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம்தான் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஏ.சி.சண்முகம் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தார். இந்த தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில்தான் நிற்க விருப்பப்பட்ட நேரத்தில், ஐந்து தொகுதிகள் மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். 
 

துரைமுருகன் மகன் போட்டியிடுவதால் தனக்கு நெருக்கடி இருக்கும் என்பதால், திமுக தரப்பு எப்படி வேலை செய்கிறது என விசாரித்துள்ளார். அப்போது, அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வாக்குகள் மற்றும் அதிமுகவில் உள்ள தலித் வாக்குகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை திமுக எடுத்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. 
 

இதையடுத்து திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வாய்மொழியாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் அதனை கொள்ளததால், பாஜகவின் தலைமையான டெல்லிக்கு தகவல் அனுப்பியதோடு, நான் அதிமுகவில் வெற்றி பெற்றாலும் பாஜக வேட்பாளர் போலதானே. அதனால் எனது வெற்றி பாதிக்கக்கூடாது அல்லவா என கூறியிருக்கிறார். இந்த தகவல் குறித்து விசாரிக்குமாறு டெல்லி கூறியதையடுத்து துரைமுருகன் வீடு, கல்லூரி, திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்துள்ளது என்கிறார்கள்.

 

duraimurugan



சோதனை குறித்து துரைமுருகன் செய்தியாளர்களிடம், வேலூரில் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களை திசை திருப்பவே ஆளும்கட்சி இவ்வாறு செய்துள்ளது.  இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எங்களுக்கு மன உளைச்சல் தரவும், களத்திலே நேருக்கு நேராக நின்று எதிர்க்க பலமின்றியும் இவ்வாறு செய்கின்றனர். மிரட்டுவது, பொய் கூறுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்து ‘மோடி ஜே’ என கூறிவிடுவோம் என எண்ணுகின்றனர். அவ்வாறு ஒருபோதும் நடக்காது என்கிறார்.
 

A.C.SHANMUGAM


இந்தநிலையில் வேலூரில் ஏ.சி.சண்முகம் அளித்த பேட்டியில், துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளது. இதற்கு நானும் பா.ஜனதா கட்சியும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. நாங்கள் யார் மேலேயும் பழி போடவில்லை.
 

அண்ணன் துரைமுருகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார். இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும். பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு என்கிறார்.

 

 



 

சார்ந்த செய்திகள்