மக்கள் நலனுக்காக எந்தவிதமான அவமானத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக கோரிக்கை நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராடிவரும் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு டெலி கான்ஃபரென்ஸிங் வாயிலாக உரையாடினார். அப்போது, ‘நான் அவர்களிடம் நமக்குக் கிடைக்கவேண்டிய நீதியைக் கோருகிறேன். ஆனால், மத்திய அரசும், பா.ஜ.க.வும் அதற்குப் பதிலாக நம்மைத் தாக்கிப் பேசுகின்றனர். பரவாயில்லை; மக்கள் நலனுக்காக எந்தவிதமான அவமானங்களையும் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு மற்றும் அவருடன் வந்த எம்.எல்.ஏ.க்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு சென்றனர். அதுமட்டுமின்றி, சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் கறுப்பு பேட்ஜ் அணிந்துசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.