கன்னியாகுமரியில் தேமுதிக சார்பில் கழக கூட்டம் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “காசு கொடுக்காமல் சோறு, நூறு என எதுவும் கொடுக்காமல் கூடும் கூட்டம் தேமுதிக கூட்டம் மட்டும்தான். இங்கிருக்கும் ஒவ்வொரு கொடி, பேனர், அந்த டியூப் லைட்ஸ் இவை எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. நாம் என்ன ஆளுங்கட்சியா இல்லை எதிர்க்கட்சியா எதுவுமே இல்லையே. எதிர்க்கட்சியாக ஆனோம். ஆனா எல்லாரும் துரோகம் பண்ணி விஜயகாந்த் முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் எல்லோரும் விஜயகாந்த் உடன் இருந்திருந்தால் அவருக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு இருக்காது. இந்தக் கட்சியை யாராலும் தொட்டுப் பார்க்கவும் முடிந்திருக்காது. விஜயகாந்த் மிக நல்லவர் ஆனால் எல்லோரையும் நம்பிவிட்டார்.
விஜயகாந்த் முதுகில் குத்திவிட்டுப் போனவர்கள், நாம் நன்றாக இருக்கிறோம் என்று இன்று நினைக்கலாம். ஒருவர் கூட நன்றாக இல்லை. ஜெயலலிதாவை விஜயகாந்த் அப்படி என்ன கேட்டுவிட்டார். ஏன் பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்தினீர்கள் என்றுதான் கேட்டார். மக்கள் பிரச்சனைகளைத் தானே கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா, இனிமேல் உங்களுக்கு இறங்கு முகம்தான் என்று சொன்னார்.
விஜயகாந்த்திற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர் இன்றும் நம்முடன் இருக்கிறார் அல்லவா. விஜயகாந்த்தினைப் பார்த்து நீங்கள் அவ்வளவுதான் எனச் சொன்னவரை நீங்கள் அவ்வளவுதான் எனக் கடவுள் கொண்டு சென்றுவிட்டார்.
விஜயகாந்த் எந்த லட்சியத்திற்காகக் கட்சியை ஆரம்பித்தாரோ அவர் கண் முன் அவை கண்டிப்பாக நிறைவேறும்” எனக் கூறினார்.