அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜகவும் இருந்தால் போதும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் தேமுதிகவையும் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினார் பியூஸ் கோயல். இதையடுத்து தேமுதிகவுக்கு 3 தொகுதிகளை தருவதாக கூறியுள்ளார்.

பேரத்தை அதிகரிப்பதற்காக திமுகவிடம் தேமுதிக பேச ஆரம்பித்தவுடன் பாஜகவும், அதிமுகவும் அதிர்ச்சி அடைந்தது. சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு வந்த மோடி, தேமுதிக என்ன ஆனது என்று கேட்டுள்ளார். அப்போது திமுக - அதிமுக என ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் பேசியதை சொல்லியிருக்கிறார்கள் பாஜக தலைவர்கள்.
நேற்று வரை தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வர நல்ல முடிவை எடுக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறினர். இந்த நிலையில் தேமுதிகவின் டபுள் கேம் அரசியலை அறிந்த மோடியும் தேமுதிக மீதிருந்த மதிப்பை புறந்தள்ளியிருக்கிறார் என்கிறார்கள் பாஜக தலைவர்கள்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 37 அதிமுக எம்.பி.க்களால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்ற பிரேமலதாவின் பேச்சை ஏற்க முடியாது. பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சிலர் பொறுமை இழந்து ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர், எம்ஜிஆர் சொன்னதுபோல் அனைவருக்கும் பொறுமை வேண்டும் என கூறினார். ஜெயக்குமாரின் பேட்டி தேமுதிக கூட்டணிக்கு வேண்டாம் என்பதை காட்டுகிறது என்கிறனர் அரசியல் பார்வையாளர்கள்.