“ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் பழனிசாமி பதவி விலகி இருந்தால் இன்றைய முதலமைச்சரை பார்த்து கேட்கும் அருகதை அவருக்கு இருந்திருக்கும்” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு டிடிவி ஒரு ஓபிஎஸ் இணைந்ததற்கு இப்படி பதறுகிறார்கள். ஒரத்தநாட்டில் மேடையில் நாடகங்களில் பத்மாசுர வேஷம் போட்டு ஆடுவது போல் ஆடுகிறார். பழனிசாமிக்கு நான் சொல்வதெல்லாம், நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் நீண்ட கால நண்பர்கள். இடையில் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்திருந்தோம். இன்று நானும் எனது நண்பரும் மீண்டும் இணைந்துவிட்டோம். ஜெயலலிதா தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் ஓயமாட்டோம். பணமூட்டைகளோடு திரிபவர்களை வீழ்த்தி ஜெயலலிதாவின் இயக்கத்தை அவரது தொண்டர்கள் கைகளில் ஒப்படைப்போம்.
அதிமுக இன்று ஒரு சில சுயநலவாதிகள் கையிலே பணபலத்தை மட்டும் நம்பி அரசியல் செய்பவர்கள் கைகளில் சிக்கியுள்ளது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பு என்னிடமும் ஓபிஎஸ்ஸிடமும் தொண்டர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நிச்சயம் உறுதியாக நிறைவேற்றிக் காட்டுவோம். திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 60 மாதங்களில் வரும் கெட்ட பெயரை 24 மாதங்களில் அடைந்துள்ளது. அதே நேரத்தில் ஜெயலலிதா மறைந்த பின் பழனிசாமி செய்த துரோக ஆட்சியால் தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து திமுக திருந்தி இருக்கும் என்று தான் திமுக கைகளில் ஆட்சியை கொடுத்தார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் குருவியை போல் 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது காவல்துறைக்கு தலைமை பொறுப்பில் இருந்த பழனிசாமி அன்றைக்கு பதவி விலகி இருந்தால் இன்றைய முதலமைச்சரை பார்த்து கேட்கும் அருகதை அவருக்கு இருந்திருக்கும்” என்றார்.