காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை இன்று ராகுல் துவங்கியுள்ளார்.
முன்னதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ''இன்று காலையில் ராகுல் காந்தி அவரது தந்தையின் ஆசியை பெற்றுவிட்டு, காந்தி மண்டபத்திலே மகாத்மா காந்தியடிகளின் ஆசியைப் பெற்று, காமராஜ் மண்டபத்திலே காமராஜ் உடைய ஆசியைப் பெற்று இந்த பாரதத்தை இணைக்கும் நடை பயணத்தை தொடங்க வந்திருக்கக்கூடிய ராகுல் காந்தி அவர்களை தமிழ்நாடு மக்களின் சார்பாக, தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் சார்பில் வருக வருக என்று வரவேற்கிறேன்.
இந்த நடைபயணத்தை கேலி செய்பவர்கள், கொச்சை செய்பவர்கள் இந்த நாட்டிலே இருக்கிறார்கள் என்பதற்காக வருந்துவதோடு, அவர்களை மன்னிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 1942 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை வைத்தார். அந்த நேரத்தில் காந்தியடிகள் ஒரு மந்திரத்தை தந்தார் 'டூ ஆர் டை' 'செய்து முடி அல்லது செத்து மடி' என்று சொன்னார். ஆனால் அப்படிப்பட்ட காந்தியின் சுதந்திர போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி மற்றும் மக்களின் போராட்டத்தில் நீங்கள் பங்கேற்கவில்லை. மாறாக போராட்டத்தை கொச்சைப் படுத்தி ஆங்கிலேய ஆட்சியே இருக்க வேண்டும் என அவர்களுக்கு பணிந்தவர்கள் நீங்கள்'' என்றார்.