அதிமுகவிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஓபிஎஸ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலரையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இந்த சூழலில் திமுக கூட்டணியின் பலத்தை எதிர்கொள்ள வேண்டுமாயின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிற குரல்கள், பல மாதங்களாகவே எதிரொலித்து வந்தன. சசிகலா, ஓபிஎஸ் உள்பட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் சீனியர் தலைவர்கள் 6 பேர், எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
அதே போல, அதிமுகவை பலமாக்கி அக்கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக தலைமையும் கடும் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுடன் கூட்டணி இல்லை ; நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கமுடியாது என்று மறுத்து வருகிறார். இதனால் அதிமுகவில் எடப்பாடிக்கு எதிரான அணி பலம் பெற்று வருகிறதாம். அதேசமயம் பாஜக தலைமையிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தையும் எடப்பாடி பழனிசாமி பொருட்படுத்துவதில்லையாம். இந்த சூழலில், அவருக்கு எதிரான ஆட்டத்தை பாஜக தலைமை தொடங்கி இருக்கிறதாம்.
இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் நேற்றிலிருந்து(22.10.2024) வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று(23.10.24) ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான வைத்தியலிங்கம் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்து வருகிறது. இந்த சோதனை விவகாரங்கள் எடப்பாடியை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
இது குறித்து நாம் விசாரித்தபோது, "சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும் எடப்பாடிக்கும் எல்லாமுமாக இருந்து வரும் சேலம் இளங்கோவனின் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஐடி காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர் அண்ட் கல்லூரியில், இளங்கோவன் மற்றும் அவரது மகன் பீரவின் குமார் ஆகியோரின் தலைமையில் மறைமுக நிர்வாகம் இயங்கி வருகிறது. நேற்று முதல் திருச்சி வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், இன்று (23.10.24) ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்து வருகிறது. ஓபிஎஸ் தலைமையின் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்படலாம் என்ற முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. இதற்காக, எடப்பாடி பழனிசாமியிடம் இரண்டுக்கட்ட பேச்சுவார்த்தையையும் வைத்தியலிங்கம் நடத்தியிருப்பதாக பாஜக தலைமைக்கு தகவல் தரப்பட்டு அது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழல்களின் பின்னணியில் தான் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்து வருகிறது” என்று விவரிக்கிறது விவரமறிந்த வட்டாரங்கள்.
பாஜகவை எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில், கூட்டணி கணக்கில் விளையாடத் தொடங்கியிருக்கிறது டெல்லி