அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ பின்னால் அணி வகுத்ததால் சபாநாயகர் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அந்த தொகுதிகள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த தொகுதிகளில் எப்போது தேர்தல் என தெரியாத நிலையில் தேர்தல் பரபரப்பு தொகுதியில் தொற்றிக்கொண்டது.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அந்த தொகுதிகளில் சீட் வாங்கிவிட வேண்டும்மென அதிமுக, திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் துடியாக துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் குடியாத்தம் தொகுதியில் வேட்பாளராக நிற்க திமுகவில் சீட் கேட்பவர்களை பார்த்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குடியாத்தம் தனி தொகுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயந்திபத்மநாபனே மீண்டும் தினகரன் கட்சி சார்பில் களத்தில் இறங்குகிறார். அதிமுகவில் குடியாத்தம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர்கள் தங்கமணி, சேவூர்.ராமச்சந்திரன், வீரமணி, ஆதிராஜராம், மா.செ ரவி எம்.எல்.ஏ, லோகநாதன் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ கனவில் உள்ள ஆம்பூர் ந.செ மதியழகன், கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், பேரணாம்பட்டு தெய்வகுமார், குடியாத்தம் நகர துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி, பேராணம்பட்டு எக்ஸ் கவுன்சிலர் இன்பரசன், வழக்கறிஞர் அணி கோவிந்தசாமி போன்றோர் ஜோலார்பேட்டை முதல் சென்னை வரை காய் நகர்த்துவதோடு, பெட்டியோடு அலைகின்றனர். என் ஆசியில்லாம இங்க யாரும் சீட் வாங்க முடியாது என கட்சியில் அமைச்சர் வீரமணியால் ஓரம்கட்டப்பட்ட குடியாத்தம் ந.செ பழனி சவடால் விட்டுக்கொண்டுள்ளார்.
திமுகவில் கடந்த முறை நின்று தோற்றுப்போன ராஜமார்தாண்டன் தற்போதும் கேட்கும் முடிவில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை சீட் தரப்பட்டு தோல்வியை தழுவியவர் என்பதால் இவருக்கே திரும்ப தந்தா தோல்வி தான் என உட்கட்சியிலேயே பேசி அவரை டேமேஜ் செய்கின்றனர். குடியாத்தம் ஒ.செ கல்லூர்ரவி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரது தம்பி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்மு என்பவரை மணந்துள்ளார். அந்த அம்முவை பொதுத்தேர்தலின்போது ரிசர்வ் தொகுதியான கே.வி.குப்பத்தில் சீட் வாங்கி நிறுத்தியபோதே கட்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட பிரமுகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. அம்மு தோற்றுப்போனார். தற்போது குடியாத்தம் தனி தொகுதி இடைத்தேர்தலில் சீட் கேட்கும் முடிவில் இருக்க கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சேர்மன் காத்தவராயன், முன்னால் எம்.எல்.ஏ கோவிந்தன் மகன் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி மா.செ முருகானந்தம், ஆசிரியர் கௌதமபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் மனோஜ், உட்பட சிலர் எம்.எல்.ஏ சீட் தலைமை தந்துவிடும் என லாபி செய்துக்கொண்டு உள்ளனர்.
ஆளும்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் தேர்தல் எப்போது என தெரியாத நிலையில் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம், பூத்கமிட்டி கூட்டம் என நடத்தி கட்சியினரை தேர்தலுக்கு தயார் செய்துக்கொண்டுள்ளார்கள். பாலாற்று மணல் கொள்ளையால் வரும் கோடிக்கணக்கான பணம் ஆளும்கட்சியிடம் அபரிதமாக உள்ளதால் பூத்க்கு 5 ஆயிரம் என முதல்கட்டமாக வழங்கியுள்ளார்கள் என குற்றம்சாட்டுகின்றனர் திமுகவினர்.