கிரண்பேடி பதவியை விட்டு சென்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர், “புதுச்சேரியில் 23 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் துணைநிலை ஆளுநருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு செயலர் நியமிக்கவில்லை. புதுச்சேரியில் உள்ள 23 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில், ஒருவருக்கு கூட தகுதி இல்லையா? கிரண்பேடி ஆய்வுக்காக செல்லும்போது புதுச்சேரி அரசு பேருந்தின் ரூட்டை கேன்சல் செய்து பயன்படுத்தினார். ஆனால் பேருந்தை பயன்படுத்தியதற்கான தொகையை இதுவரை ஆளுநர் மாளிகை செலுத்தவில்லை.
ஏனாம் பிராந்தியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காத காரணத்தால் ஜூலை 01-ஆம் தேதி முதல் சுத்தப்படுத்தும் பணி நடக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆளுநர் பதவி வகிக்க மாட்டேன் என கிரண்பேடி தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை பதவியை தொடர்ந்து வருகிறார். அவர் பதவியை விட்டு சென்றால் நாளையே அரசியலை விட்டு விலகத் தயார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் கடிதம் அளிக்க உள்ளேன். மத்திய அரசின் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் ஏனாம் பிராந்தியத்தில் திட்டமிட்டு தடை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவிலை. அதற்கான காரணம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
கிரண்பேடி இருக்கும் வரை புதுச்சேரியில் அடுத்த 100 ஆண்டுகள் ஆனாலும் பாஜக ஆட்சி அமையாது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருக்கக்கூடாது, மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தக்கூடாது என கிரண்பேடி செயல்படுகிறார். அரசு அதிகாரிகளை கிரண்பேடி மிரட்டுகிறார். அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வரும்" என கூறினார்.