கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை வரவேற்று அதிமுகவின் எடப்பாடி தரப்பு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ்ஸிடம் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதன் பிறகு மேல்முறையீடு செய்ய போறீங்களா? அடுத்தகட்ட மூவ் என்ன எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு ''உரிய நல்லதொரு அறிவிப்பு வெளியாகும்; நீதி யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்'' என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டுச் சென்றார்.