பா.ஜ.க. மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இன்னும் 2024 தேர்தலுக்கான சூடு என்பது ஆரம்பிக்கவில்லை. தற்போதைக்கு எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் அரசியலுக்காக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். அகில இந்திய கட்சியாக தற்போது ஐந்து மாநிலத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒன்பது தொகுதிகளில் பா.ஜ.க. தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் கொஞ்ச தினத்தில் இந்த ஒன்பது தொகுதிகளுக்கு செலுத்தப்படும் கவனம் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் செலுத்துவோம்.
தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் இருப்பதால் வேட்பாளர்கள் குறித்து இப்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. நாட்கள் அதிகம் இருப்பதால் அரசியல் சூழலும், களச் சூழலும் மாறும்.
தமிழ்நாட்டில் நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு சமூக வலைத்தள நிர்வாகிகளை வீட்டுக்குள் புகுந்து இரண்டு, மூன்று மணிக்கு கைது செய்கிறார்கள். அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்; கட்டமைப்பை இன்னும் வலிமைப்படுத்த வேண்டும்.
அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் ஆ. ராசாவுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் மூன்று நான்கு நாட்களாக வருமானவரித் துறை சோதனை நடந்து வருகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அதில் பெரும் அளவில் பறிமுதல் நடைபெற்றுள்ளது. இதில் இருந்து தமிழ்நாட்டில் மக்கள் பணம் எந்த அளவுக்கு தனியார் பணமாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் வரிப் பணத்தில் அரசியல்வாதிகள் வாழ்வது புதிதல்ல. ஆனால், தற்போது அமலாக்கத்துறையும், வருமானவரித் துறையும் மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக வைக்கிறார்கள்” என்றார்.