ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்து போனால் அடுத்த ஆறுமாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வைக்க வேண்டும்; அதன்படி தேர்தல் ஆணையம் வருகின்ற பிப்ரவரி 27 அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே அங்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறதா? அதிமுக கூட்டணியில் மீண்டும் தமாகா சார்பாக போட்டி வேட்பாளரை நிறுத்தப் போகிறார்களா? என்பதெல்லாம் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. திமுக - அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் யாருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படப்போகிறது என்பது இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
இந்நிலையில் ஈரோட்டில் இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் “தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க., கூட்டணிக் கட்சிகளுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறி வருகிறார்கள். எந்த அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிக்க அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும்.” என்று சவால் விடுத்துள்ளார். மேலும், அ.தி.மு.க பற்றி கூறும்போது, “அவர்களின் கட்சிக்குள் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒரு முடிவு இல்லாமல் உள்ளனர்” என்று அவர் கூறினார்.