சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆ தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளராக பொங்களூர் பழனிசாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் சூலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது அந்த 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டால், நடந்து முடிந்த 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் குறைந்தது 5, 6 இடங்களில் வெற்றி பெற்றால்தான் இந்த ஆட்சி நிலைக்கும். முதலில் கிடைக்கும் என்று போலீஸ் சொல்லிவிட்டார்கள். பின்னர் அவர்கள் சொல்லும்போது ஒரு தொகுதி கிடைத்தால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.
இதனால் நடக்க இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஐந்தாயிரம், ரூபாய் பத்தாயிரம் கொடுப்பது, எப்படியும் அதில் ஜெயித்து காட்டுவது என்ற நிலையை எடுத்து கோடிக்கணக்கான பணங்களை அதிமுகவினர் இறக்கியுள்ளனர்.
மக்கள் மீது நம்பிக்கை போய், பணத்தின் மீது நம்பிக்கையை கொண்டு வந்திருக்கிறார்கள். கோவை மக்களை பொறுத்தவரை தெளிவானவர்கள். அரசியல் அறிந்தவர்கள். நாட்டு நடப்பு புரிந்தவர்கள். நிலைமைகளை அறிந்தவர்கள். பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நூற்றுக்கு நூறு திமுக வெற்றி பெறும். சூலூரையும் ஜெயித்து கொடுங்கள். 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக்கொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.