மதிமுக சிறுபான்மையினர் அணி நடத்திய ரமலான் நோன்பு திறக்கும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். எழும்பூர் சிராஜ் மஹாலில் நடந்த இவ்விழாவில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய வைகோ, “இந்தியாவில் இஸ்லாம் மக்களை எவ்வளவு துன்புறுத்த முடியுமோ அவ்வளவு துன்புறுத்துகிறார்கள். ஹிஜாப் வைக்கக்கூடாது என சொல்லி கர்நாடக மாநிலத்தில் 2022ல் ஒரு விதியை கொண்டு வந்தார்கள். அதனை மீறி பெண்கள் ஹிஜாப் வைத்துக்கொண்டு போனார்கள். அப்படி ஒரு பெண் போகும்போது அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை சுற்றிக் கொண்டு ஜெய் ஸ்ரீ ராம் என சத்தம் போட்டார்கள். அந்த பெண் ஓடவில்லை. அந்த பெண் திரும்பி வந்தாள். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு அல்லாஹூ அக்பர் என்று சத்தம் போட்டாள். அந்த பெண்ணின் பெயர் முஸ்கான். இன்று உலகமெங்கும் முஸ்கான் என்றால் தெரியும். இந்து மதவாத சக்திகளை எதிர்ப்போம் வீழ்த்துவோம்” எனக் கூறினார்.