![Gaurav Vallabh joined BJP](http://image.nakkheeran.in/cdn/farfuture/4FIZHlyDJEGCrW7pfQAsgu7NRpgNhc21C9uHrPaW6d8/1712224477/sites/default/files/inline-images/Gourav-Vallabh-art.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இத்தகைய சூழலில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் அக்கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து கவுரவ் வல்லப் கூறுகையில், “மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விரிவான கடிதம் எழுதி, எனது உணர்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்தினேன். கூட்டணியின் சில பெரிய தலைவர்கள் சனாதனம் மற்றும் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்தபோது காங்கிரஸ் கட்சியின் மௌனம் என்னை காயப்படுத்தியது. ராமர் கோவில் மீதும், நம் நாட்டில் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளத்தை உருவாக்குபவர்களை இரவு பகலாக துஷ்பிரயோகம் செய்கிறது. இந்த விஷயங்களை நான் தெளிவாக உணர்ந்து, கட்சி மேடையிலும் பல இடங்களில் இந்த விஷயத்தை எழுப்பினேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கவுரவ் வல்லப் இன்று (04.04.2024) தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். முன்னதாக பிரபல குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் நேற்று (03.04.2024) பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.