கரோனா ஊரடங்கு பேரிடர் காலத்தை நெல்லை மாவட்ட ஏழை எளிய மாணவ-மாணவியர்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் ஒரு அற்புத வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது தி.மு.கவின் நெல்லை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி!
இந்தப் பேரிடர் காலத்தில் மாணவ-மாணவியர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்திற்கேற்ப அவர்களின் கல்வித் திறனைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில், ‘நெல்லை மாவட்டத்தில் ஐ.ஏ.ஏஸ்.!’ என்கிற முழக்கத்துடன், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் தொடங்கியிருக்கிறார் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய எட்வின்.
பொது முடக்க காலத்தில் தி.மு.க. இளைஞரின் இத்தகைய முயற்சி, நெல்லை மாவட்ட மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது. இது குறித்து ஆரோக்கிய எட்வினிடம் நாம் பேசியபோது, ‘’ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் எங்கள் மாவட்ட ஏழை எளிய நடுத்தரவர்க்கத்து மாணவர்களுக்கான அடுத்த கட்ட முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம். நெல்லை மாவட்ட மாணவர்கள் அதிகளவில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது என்னுடைய பேராவல். அதனால், அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என முடிவு செய்தோம்.
தற்போதைய நெருக்கடி காலத்தில் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களை இப்போதிலிருந்தே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார்படுத்துவோம் எனத் திட்டமிட்டு, ஆன்லைனில் ஐ.ஏ.எஸ். பயிற்சியைத் தொடங்க முடிவு செய்து முதல் கட்ட முயற்சியை எடுத்து வைத்துள்ளோம். இதனை அடுத்து, மாவட்டத்தில் சில இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு நேரடியாகவும் பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
முதல் 2 மாதங்கள் ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால் அதற்குரிய பயிற்சிக் கட்டணத்தை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். அந்த வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும். போட்டித் தேர்வுகளில் நெல்லை மாவட்ட மாணவர்களை வெற்றியாளர்களாககவும், அதிக அளவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும் உருவாக்குவதே நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இலக்கு‘’ என்கிறார் பெருமிதமாக.
ஆன்லைன் இலவசப் பயிற்சி வகுப்புகளில் இணைய 89397 56344 என்கிற பொது எண்ணையும் வெளியிட்டுள்ளார் ஆரோக்கிய எட்வின்!