ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியிலிருந்து சில நிர்வாகிகள் இ.பி.எஸ். அணிக்கு மாறினர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு இடைத் தேர்தலின்போது, அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பிலிருந்து செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரம் எழுந்ததும் செந்தில் முருகனை வாப்பஸ் பெற வைத்தார் ஒ.பி.எஸ். தொடர்ந்து இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக இ.பி.எஸ். அணி தேர்தலை சந்தித்தது. இதில், இ.பி.எஸ். அணி வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும் வாங்கி, 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இதனைத் தொடர்ந்து இ.பி.எஸ். மீது ஓ.பி.எஸ். அணியினர் கடுமையான விமர்சனங்களை வைத்துவந்தனர்.
அதேசமயம், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து அதிமுக இ.பி.எஸ். அணியில் இணைந்தனர். இதற்கு பாஜக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழ, இ.பி.எஸ். அணியினரும் கடுமையாக பதிலடி கொடுத்துவந்தனர். பிறகு நடந்த இ.பி.எஸ். அணி மா.செ. கூட்டத்திற்கு பிறகு இந்த வார்த்தை போர்கள் சற்றே ஓய்ந்தன.
இந்த நிலையில், இன்று அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.