அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதற்கு முழுமையாக மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசும் திமுக, மத்திய அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு அவர்களையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
இப்படி இந்த விவகாரம் சூடு பிடித்து பரபரப்பாக இருந்து வந்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்து மத்திய அரசின் மதிய தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் செயல்படுமாறு தெரிவித்திருந்தார். அதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில், ஐந்து நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக இன்று டெல்லியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணியை சந்தித்துப் பேசியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், சட்ட சிக்கல் எழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.