தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி, 30-ந்தேதி என இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 19-ந் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு இத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து அதிமுக தலைமையோ, அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் கலந்து பேசி வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது.
அதன்படி அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் கூட்டணிக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கான இடங்களை பெற்றுக்கொண்டனர். பல்வேறு இடங்களில் கூட்டணிக் கட்சியினர் கேட்ட இடங்களை அதிமுக தலைமை ஒதுக்கவில்லை.
இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சேலம் அஸ்தம்பட்டி அருண்நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டியை சேர்ந்த இரணடு பாமக பிரமுகர்கள் வந்தனர். அவர்கள் தங்களுக்கு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர். அதற்கு கட்சி நிர்வாரிகள் அது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்று சொல்லியுள்ளனர்.
அதற்கு அவர்கள் இரண்டு பேரும், அது தெரியும். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற காலஅவகாசம் உள்ளது. ஆகையால் பேச்சுவார்த்தை நடத்தி தாங்கள் போட்டியிட உதவ வேண்டும் என்று கேட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனால் கட்சி அலுவலகத்தில் இருந்த பாமக மாநில நிர்வாகிகள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி, அடுத்து வரும் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சீட்டு கேட்டு கட்சி அலுவலத்தில் தீக்குளிக்க முயன்ற பிரமுகர்களால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.