முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, சிறையில் இருந்து வெளியே வந்தபோது அதிமுகவைக் கைப்பற்ற நடவடிக்கைகள் எடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சில நாட்களாக அவரது தொண்டர்களுடன் சசிகலா பேசும் செல்ஃபோன் ஆடியோக்கள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ''ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இருக்கின்ற அதிமுகதான் உண்மையான அதிமுக. அவர்களுக்குத்தான் இரட்டை இலை என்பதை இறுதி தீர்ப்பாக இந்தியாவினுடைய உச்சபட்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தெளிவாக வழக்கில் தீர்ப்பு சொல்லிவிட்டது. ஆகவே இப்போது இவர்கள் என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. எளிமையாகப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமென்றால், எங்களுடைய பெரியவர் காளிமுத்து, அவர்தான் அடிக்கடி சொல்வார் கருவாடு மீனாகாது என்று. கருவாடு கூட இப்போது மீனாகிவிடும், ஆனால் சசிகலா அதிமுகவில் உறுப்பினராக கூட முடியாது'' என்று கட்டமாக பேசினார்.