ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்க, கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரை சந்திக்க செல்லும்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளான திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் அங்கு வருவதற்கு சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனால் கமலாலய வாசலில் சிறிது நேரம் காத்திருந்தோம். உடனே நாங்கள் யாருக்கோ காத்திருப்பது போல பரப்பி விட்டனர். இந்தியா ஒரு சுதந்திர நாடு. ஒருவர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் குஜராத் மட்டுமில்லை பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் என எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அவர் அவ்வாறு செல்வதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சீரும் சிறப்புமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் எப்படி தன்னை அதிமுக என்று சொல்லிக்கொள்ள முடியும். அவர் அவ்வாறு சொல்வது சட்டப்படி தவறு. எனவே அதிமுகவை திமுகவின் பி டீமாக சிறுமைப்படுத்த தொந்தரவு கொடுக்கும் செயல்பாடுகளில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை மக்கள் சுயேட்சை வேட்பாளராகத்தான் கருதுவார்கள். அவர் ஏற்கனவே தன்னுடைய நிலையில் இருந்து கீழே சென்றுவிட்டார். இந்த இடைத்தேர்தலில் அவரது கதை முடியும். அவர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் நோட்டாவுக்கு கீழே சென்றுவிடுவார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்து இடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே உண்டு. அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. திமுக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதே வேளையில் அதிமுக எழுச்சியுடன் காணப்படுகிறது. எனவே அரசின் மோசமான செயல்பாடுகளை எடுத்து சொல்லியும், அதிமுக அரசின் சாதனைகளை சொல்லியும் இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். மேலும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டும் தேர்தலாகவும் இந்த தேர்தல் அமையும்" என்றார்.