![Former Health Minister Vijayabaskar said contract nurses should be made permanent](http://image.nakkheeran.in/cdn/farfuture/szcXMf0dAw_0ni2LVXiL9U0_Sx2P-qamx-vskHb47D8/1672903081/sites/default/files/inline-images/994-pratheep_47.jpg)
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அலையின் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத் துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிக செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதைக் கண்டித்து பாமக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஆனால், தங்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டால், அது நிரந்தரப் பணியாக இருக்காது என்றும், அதனால் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரியும் ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தான் நாங்கள் பணி நியமனம் செய்தோம். கொரோனா காலத்தில் பணிக்குச் சேரச் சொல்லி 8,500 பேருக்கு ஆணை அனுப்பினோம். ஆனால், அவர்களில் 2,400 பேர் மட்டும் தான் பணிக்கு வந்திருந்தார்கள்.
இரவுபகலாக தூங்காமல் கர்ப்பிணிகள், பெண்கள் வெளிமாவட்டத்தில் தங்கி; கிடைத்த இடத்தில் தங்கிச் சாப்பிட்டுப் பணி செய்த இவர்களுக்குப் பணிநியமனம் செய்ய அரசு யோசிப்பது ஏன்? கொரோனா காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதுதான் நியாயம். இது குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக கேள்வி எழுப்பும்" என்று தெரிவித்திருக்கிறார்.