மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க முதலமைச்சருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடி கடந்த வருடம் ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 22 ஆம் தேதி 75,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.
மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது தொடர்கதையாக இருக்கிறது. இலங்கை கடற்படை அவர்களைக் கைது செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது. அவர்கள் கைது செய்கிறார்கள் நாம் மீட்டுக்கொண்டு வருகிறோம். தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படை சுட்டது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு அது குறித்து சொல்கிறோம்.
இலங்கை தனி நாடு. அவர்களுக்கு சட்டம் இருக்கிறது. அதன் படி படகுகளை அவர்கள் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். புதுச்சேரி மீனவர்களுக்கு ட்ராக்கிங் டிவைஸ் கொடுத்துள்ளோம். புதுச்சேரிக்கு சிறப்பு நிதியாக மத்திய அரசு 1400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது” எனக் கூறினார்.