முதன்முறையாக முதலமைச்சர் பெயரில் 25 கோடியில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு அடுத்த நாளான மார்ச் 21 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 9 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பும் இந்தாண்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எனவே, மார்ச் 20ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட். இந்நிலையில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பட்ஜெட் வரப் போகிறது பொறுத்திருந்து பாருங்கள். முதலமைச்சரிடம் கோரிக்கைகளை வைத்துள்ளோம். விளையாட்டுத்துறைக்காக முதன்முதலாக இந்த வருடம் முதலமைச்சரின் பெயரில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதலமைச்சர் கோப்பை ஆரம்பித்துள்ளோம். விரைவில் இறுதிப்போட்டி நடைபெறும். இறுதிப்போட்டியில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசு கொடுப்பார். தஞ்சாவூரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி கொண்டு வருவதற்கான வேலைகள் அறிவித்துள்ளோம். அது சம்பந்தமாக அடுத்து அங்கு தான் செல்ல இருக்கிறேன். ஆஸ்கர் விருதை வென்ற அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்” என்றார். உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.