Skip to main content

“பெண் அமைச்சருக்கு அடக்கம் வேண்டும்” - நிர்மலா சீதாராமனை சாடிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Published on 17/09/2024 | Edited on 17/09/2024
EVKS Ilangovan slams Nirmala Sitharaman

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில்  கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், அன்னபூர்ணா உணவக உரிமையாளருமான சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி குறித்து கோரிக்கையுடன் பல கேள்விகளை முன்வைத்தார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக உணவக உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.கவின் கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த பிரச்சனையை இதோடு முடித்து கொள்ள விரும்புவதாகவும் அன்னபூர்ணா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதையடுத்து, இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. 

இந்த நிலையில், இன்று (17-09-24) தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பித்து வருகிறது. இந்த விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவிகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அமைச்சருக்கு குறிப்பாக பெண் அமைச்சருக்கு அடக்கமும், பணிவு வேண்டும். ஆனால், இது எதுவும் இல்லாமல் அவர் இருக்கிறார். உணவக உரிமையாளர் எழுந்து நின்று அவருக்கு மன்னிப்பு கேட்கிறார். ஆனால், மூஞ்சியில் எந்த உணர்வும் இல்லாமல் அந்த அம்மையார் கல்லைப் போல் அமர்ந்திருக்கிறார். மனிதர்களை மதிக்கக்கூடிய மனிதத்தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்