Skip to main content

பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய்ப் பதிப்பைச் செயல்படுத்த முயற்சிப்பது பச்சைத் துரோகம்: கொ.ம.தே.க. ஈஸ்வரன் காட்டம்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

eswaran er

 

இந்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனம் வாழ வழி தெரியாமல் வேதனையில் இருக்கிற விவசாயிகளுடைய நிலங்களில் எண்ணெய்க் குழாய்ப் பதிக்க முயற்சிக்கக் கூடாது. சாலையோரமாக எடுத்துச் செல்வதற்கான புது திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் வாரியத்தினுடைய உயர்மின் அழுத்த கோபுரங்கள், கெயில் நிறுவனத்தினுடைய எரிவாயு குழாய்கள், ஓ.என்.ஜி.சி.-யினுடைய பலதரப்பட்ட குழாய்கள் போன்ற பல்வேறு விதமான வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குகிற திட்டச் செயல்பாடுகளைக் கொண்டு தொடர்ந்து தமிழக விவசாயிகள் பயமுறுத்தப்படுகிறார்கள்.  

 

தற்போது இந்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு எண்ணெய்க் குழாய்ப் பதிக்கின்ற திட்டத்தை யாரையும் கருத்துக் கேட்காமல் உருவாக்கி தற்போது கரோனா பாதிப்பு காலத்தில் விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களில் பதிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் விடாப்பிடியாகத் திட்டப்பணிகளைத் தொடங்க முயற்சிக்கிறது.

 

எதிர்ப்பைத் தாண்டி விவசாயிகள் தற்போது நிலத்தில் இறங்கி போராட ஆரம்பித்திருக்கிறார்கள். கரோனா பாதிப்பினால் நாம் என்ன ஆவோம் என்று எதிர்காலம் தெரியாமல் திகைத்துப்போய் இருக்கின்ற விவசாயிகளை வீழ்த்த முயற்சிப்பது அரசாங்கத்திற்கு அழகல்ல. களநிலவரம் பற்றி புரிந்து கொள்ளாமல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் எளிதாக விவசாயிகளை விரட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பது அவர்களுடைய செயல்பாடுகளில் கண்கூடாகத் தெரிகிறது.

 

போராடுவதற்காக கிராமப்புறங்களில் விவசாயக் குடும்பங்கள் ஒன்றாகக் கூடும் போது தனிமனித விலகல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிப் போகும். தமிழக அரசும், அனைத்துத் தமிழக கட்சிகளும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து கரோனாவை ஒழிக்கின்ற போரிலே களத்தில் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் போது, இதுதான் சரியான நேரம் என்று பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய்ப் பதிப்பைச் செயல்படுத்த முயற்சிப்பது பச்சைத் துரோகம். 


மத்திய அரசு நிறுவனத்தினுடைய செயல்பாடுகளை உடனடியாக மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்ப் பதிப்பு திட்டத்தை நெடுஞ்சாலைகள் வழியாக எடுத்துச் செல்வதற்கு அறிவுறுத்த வேண்டும்.

 

கோவை இருகூரிலிருந்து கர்நாடகா வரை நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடிய திட்டத்தை மாநில அரசு வகுத்து பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

அதன் மூலம் விளைநிலங்களில் குழாய்ப் பதிப்பதற்கு பதிலாக சாலை ஓரங்கள் வழியாகச் செயல்படுத்துவது சாத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும். எண்ணெய்க் குழாய்ப் பதிப்பிற்கு எதிராக தற்போது நடந்து வரும் விவசாயிகளுடைய போராட்டம் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாறுவதற்கு முன்பாக மாநில அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

 

அரசினுடைய கவனத்தை ஈர்த்து எண்ணெய்க் குழாய்ப் பதிப்பின் பாதையை மாற்றுவதற்கு விவசாயிகளோடு சேர்ந்து போராடுவதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தயாராக இருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்