மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக தலைநகர் டெல்லியில் 300 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று (27.09.2021) இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘விவசாயிகளுக்கு நன்மை தருகிற, விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றுகிற வகையிலான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நிலையில், திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் அறிவித்தன.
ஆனால் போராட்டம் படுதோல்வி அடைந்ததோடு, சில அரசியல் கட்சிகளைத் தவிர எந்தவொரு விவசாயிகளும் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட தயாராக இல்லை. ஏனெனில் பிரதமரின் விவசாயிகளுக்கான பல திட்டங்கள், பயிர்க் காப்பீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார். 25 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, விவசாயிகள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றி, தொழில் முனைவோர்களாக மாற்றும். வேளாண் சட்டங்களைப் புறக்கணிக்கும் முதல்வர், விவசாயிகளின் இன்றைய நிலைக்கு என்ன தீர்வு தரப்போகிறார் என்பதை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.